சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ் பாபு தலைமையில் சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் மற்றும் திருநங்கை ரக்ஷிதா ஆகியோர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசனை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.
கடலூர் கோண்டூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ரக்ஷிதா அண்ணாமலை பல்கலைக்கழக வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பயில இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது வேதியியல் துறைத் தலைவர் ஜெயபாரதி நீங்கள் திருநங்கை ஆதலால் உங்களுக்கு கைடு (வழிகாட்டி ஆசிரியர்) கிடைப்பது மிகவும் சிரமம். எனவே நீங்கள் மற்ற கல்லூரியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு திருநங்கை ரக்ஷிதா, "திருநங்கைகள் முனைவர் பட்டம் பயிலக் கூடாதா?" எனக் கேட்டபோது. அவர் எதுவும் பேசாமல் நேரடியாக வந்து பேசுமாறு தொலைப்பேசியைத் துண்டித்துள்ளார். பின்னர் திருநங்கை நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு வந்து பேசும்போது துறைத் தலைவர் ஜெயபாரதி சரியான பதில் அளிக்கவில்லை.
அப்போது திருநங்கைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க முடியாது எனவும் நீங்களே ஒரு ஆசிரியரைத் தேர்வு செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். பின்னர் திருநங்கை இது குறித்து பல்வேறு ஆசிரியர்கள் மத்தியில் கூறினார். அப்போது ஆசிரியர் ஒருவர் இதற்கு சம்மதிக்க, அவரைத் தனது வழிகாட்டி ஆசிரியராக திருநங்கை தேர்வு செய்துள்ளார். இதற்கு வேதியியல் துறைத் தலைவர் ஜெயபாரதி இதனைப் புறக்கணித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரக்ஷிதா, சிபிஎம் கட்சி உதவியுடன் தன்னை முனைவர் பட்டம் பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட துணைவேந்தர் ராம. கதிரேசன் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
திருநங்கைகளுக்கு என்று தமிழக அரசு தனி நல வாரியம் தொடங்கி அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு போன்ற நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் வேளையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அடித்தட்டு ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிய இந்தப் பல்கலைக்கழகத்தில் திருநங்கை என்பதால் ரக்ஷிதாவை முனைவர் பட்டம் பயில புறக்கணிப்பு செய்வது வேதனைக்குரியதாக உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.