அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இந்திய பொது நிர்வாக நிறுவனம் விழுப்புரம் மற்றும் கடலூர் கிளைகள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் இணைந்து நிலையான வேளாண்மை என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. வேளாண் புல முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்து பேசுகையில், "புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நிலையான வேளாண் பணிகளை மேற்கொள்வதன் வாயிலாக விவசாயிகள் பொருளாதார மேம்பாடு அடைய முடியும்" என்றார்.
இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட இந்திய பொது நிர்வாக அமைப்பின் பொறுப்பாளர் ரங்கராமானுஜம் பேசுகையில் "இன்றைய பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணவும், விவசாயிகள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண இன்றைய இயற்கை வேளாண் தொழில் நுட்பங்களான ஜீரோ பட்ஜெட் விவசாய குறைகளை செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக குறைந்த ஈடு பொருள் செலவில் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்" என்றார். வேளாண்மை துறை உதவி பேராசிரியர் ராஜ்பிரவின் மற்றும் கடலூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் சேகர், சையத்சக்காப், கண்ணன் ஆகியோரின் ஆய்வு மற்றும் அனுபவ பகிர்வுகள் நடைபெற்றது.
சுமார் 200 வேளாண் இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் வேளாண் விரிவாக்கத்துறை முதுநிலை மாணவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்க துறைதலைவர் வெற்றிச்செல்வன், கிராமப்புற வளர்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் வேதாந்த தேசிகன், சண்முகராஜா மற்றும் ரங்கராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் விழுப்புரம் பொறுப்பாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார்.