![temple](http://image.nakkheeran.in/cdn/farfuture/T6mSaq3fOZ-dSPAYF-fIWCb5ZYqEsScn2aJ0lm_e0p4/1628165203/sites/default/files/inline-images/KAP.jpg)
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி தொடங்கியதில் இருந்து இந்துசமய அறநிலையத்துறையில் பல்வேறு கள ஆய்வுகளை அத்துறையின் அமைச்சர் சேகர் பாபு மேற்கொண்டு வருகிறார். அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அகற்றம், கோவில் சொத்துக்களை அரசு இணையதளங்களில் வெளியிடுதல் போன்ற சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' என்ற புதிய திட்டத்தை அண்மையில் அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்கட்டமாக அறநிலையத்துறைக்கு சொந்தமான 47 கோவில்களில் 'அன்னைத் தமிழில் அர்ச்சனை' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் துவங்கி வைத்துள்ளனர்.
இத்திட்டத்தை செயல்படுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ''அடுத்தக்கட்டமாக 536 கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் இந்த திட்டம் கொண்டுவரப்படும். தமிழில் போற்றி புத்தகங்கள் அச்சிடப்பட்டு கோவில்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது'' என்றார்.