சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா நேற்று (23-01-24) கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் பார்வையாளர்களாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆளுநர் விழாவில் அதிக மாணவர்களைப் பங்கேற்க செய்யும் வகையில் விழா அரங்கிலேயே வருகைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரங்கிற்கு உள்ளே சென்று விழாவிற்கு வரும் மாணவர்களுக்கு மட்டுமே வருகைப் பதிவு கொடுக்கப்படும் படி அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர். வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “400 மாணவர்கள் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு 2 மணி நேரப் பாட வகுப்புகளை ரத்து செய்து வரவழைத்தோம். மாணவர்களுக்கு நாட்டுப்பற்றை எடுத்துச் சொல்ல இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இதில் எந்த தவறும் இல்லை. இடம் அதிகம் இருந்திருந்தால் அனைத்து மாணவர்களையும் அழைத்து பங்கேற்க செய்திருப்போம். இதுபோன்ற நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.
வருகைப் பதிவை நிகழ்ச்சியில் எடுத்தால் தான், அவர்கள் கலந்து கொண்டது உறுதி செய்யப்படும். இல்லையென்றால், இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் வெளியே எங்கேயாவது சென்று விடுவார்கள். இதனால் தான், நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் வருகைப்பதிவு என்று கூறப்பட்டது. தேசப்பற்று நிகழ்ச்சியில் வகுப்புகளை ரத்து செய்து மாணவர்கள் பங்கேற்றதில் எந்த தவறும் இல்லை. இதுவும் ஒரு கற்பித்தல் நிகழ்ச்சி தான்” என்று கூறினார்.