குடியரசுத் தினத்தையொட்டி, வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, திருவெண்ணெய் நல்லூரில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்புப்படை வீரர் ராஜீவ்காந்தி, திருவொற்றியூரில் கட்டட விபத்தின் போது காப்பாற்றிய தனியரசு, கோவை வனக்கால்நடை உதவி மருத்துவர் அசோகன், மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன், திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியைக் காப்பாற்றிய சிறுவன் லோகித் திருப்பூரில் நீரில் மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன், சுதா ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. அத்துடன், ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
கோவையில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் முகமது ரஃபிக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது. சிறந்த காவல் நிலைய விருதுக்கான முதல் பரிசு திருப்பூர் தெற்கு நகர காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை தாலுகா காவல்நிலையம், மதுரை அண்ணா நகர் காவல் நிலையங்களுக்கு இரண்டாம், மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது. காவல் நிலையத்துக்கான பரிசுகளை சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தியதற்காக காவலர்கள் 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது. குடியரசுத் தினத்தையொட்டி, தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியேற்றி மரியாதைச் செலுத்தினர். காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆட்சியர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். கடலூரில் கரோனா காரணமாக, மாவட்ட ஆட்சியருக்கு பதில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தேசியக் கொடியேற்றினார். சேலத்திலும் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா என்பதால், வருவாய் அலுவலர் (பொறுப்பு) கவிதா கொடியேற்றினார்.