சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் தேசிய அறிவியல் தினத்தை யொட்டி அறிவியலில் பெண்கள் என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பரங்கிப்பேட்டை, சிதம்பரம், நெய்வேலி, விருதாச்சலம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 25- க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 350- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா, ஓவியம் வரைதல், சுவரொட்டி விளக்கக்காட்சி மற்றும் வாய்வழி விளக்கக்காட்சி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பின்னர் கலந்து கொண்ட 350 மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவர் சம்பத்குமார் வரவேற்று மாணவர்கள் மத்தியில் பேசுகையில், "மனிதர்களின் நலன் மற்றும் மருத்துவர்களுக்கான அறிவியலின் முக்கியத்துவத்தை விளக்கினார். இந்திய பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சிகளில் பெண் ஆராய்ச்சியாளர்களின் பங்கு படிப்படியாக வளர்ந்து வருகிறது" என்பதை அவர் குறிப்பிட்டார் .
கடல்வாழ் உயிரியல் புல முதல்வரும் சுற்றுச்சூழல் தகவல் மைய பொறுப்பு அதிகாரி சீனிவாசன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு அறிவியல் குறித்த அறிவை வழங்குவதில் பள்ளிகளின் பொறுப்பை சுட்டிக்காட்டினார். மேலும் பள்ளி மாணவர்களை எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் ஆக வாழ்த்தினார். நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் சம்பத்குமார், அனந்தராமன், ஜெயலட்சுமி, இணை பேராசிரியர்கள் ஆனந்தன், சரவணகுமார் உதவி பேராசிரியர்கள் குமரேசன், சுஜி மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் சுற்றுச்சூழல் தகவல் மைய குழுவினர் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.