நெல்லை மாவட்டத்தின் பத்தமடைப் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், சொந்தமாக 50 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை இவர் தனது ஆடுகளைப் பத்தமடைப் பக்கம் உள்ள மலையடிவாரத்தின் இடைஞ்சான்குளமருகே மேய்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள குளத்தில் அவைகளை தண்ணீர் குடிக்க விட்டுள்ளார். அந்தச் சமயம் திடீரென பலமான வெடிச்சத்தம் கேட்டதுடன் ஒரு ஆடு தலை சிதறிப் பலியானது. பதறியபடி வந்து பார்த்த மாரியப்பன், ஆடு வெடிகுண்டு வைக்கப்பட்ட மாம்பழத்தைத் தின்றதால் தலைசிதறியது தெரியவர, போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் தகவல் அறிந்த வனத்துறையின் களக்காடு முண்டந்துறை வனக்காப்பாளர் இளங்கோ, சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார். தொழில் போட்டி காரணமா அல்லது வனவிலங்குகளை வேட்டையாடும் வகையில் மாம்பழத்தில் வெடிவைக்கப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார். லாக்டவுண் காரணமாக மக்கள் வீடுகளில் பூட்டப்பட்டு அடைபட்டுக் கிடக்கின்றனர். தொழில், வருமானமில்லை. ஆள் நடமாட்டமின்மையால் வனவிலங்குகளான காட்டுப்பன்றி, மிளா போன்ற விலங்குகள் இரை தேடி இங்கு வருகின்றன. அவைகளை வேட்டையாடும் மர்ம கும்பல் மாம்பழத்தில் வெடிகுண்டு வைத்து தலைசிதற வெடிக்கவைத்து, சாகடித்துப் பிடிக்கின்றனர். அதன் மாமிசத்தைப் பங்குப் போட்டு விற்பனையும் நடக்கிறது என்றும் சொல்கிறார்கள் அப்பகுதியினர்.
கடந்த சிலமாதங்களுக்கு முன்பு கேரளாவின் மலப்புரம் காட்டில் வெடிகுண்டு வைத்த அன்னாசிப்பழத்தைத் தின்ற கர்ப்பிணி யானை ஒன்று தலைவெடித்து உயிரிழந்ததும் கவனிக்கத்தக்கது.