கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசனம் விழாவும், ஆனியில் ஆனிதிருமஞ்சன தேர் மற்றும் தரிசனவிழா நடைபெறும். இந்த விழாக்களில் எந்த கோயிலிலும் இல்லாத வகையில் மூலவரே தேர் பவனியிலும், தரிசன விழாவில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும். இதனால் இந்த விழா பிரசித்திபெற்றுள்ளது. இதனை காண்பதற்கு பொதுமக்களும், பக்தர்களும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து காண்பதற்கு வருகை தருவார்கள்.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்காண ஆனிதிருமஞ்ன விழா கடந்த பத்துதினங்களாக கோயிலில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான தேர் வீதியுலா நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது. நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து தேர்கள் சிதம்பரம் நகரில் உள்ள கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு வீதிகள் வழியாக வந்தது. இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தேரை., தேர் போகும் வீதிகளில் நிக்கவைத்து மண்டபடி (பூஜை) செய்தால் ஒவ்வொரு இடத்திலும் இரு தேருக்கும் தலா 2 கிராம் தங்க நாணயம் மற்றும் பூஜை பொருட்களை வழங்கவேண்டும். அதேபோல் இந்த விழாவிலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேரை நிறுத்தி மண்டகபடியை தீட்சிதர்கள் பெற்றுசென்றார்கள்.
புதன் அதிகாலை கருவரையில் இருந்து சாமியை தேருக்கு எடுத்து வரும் போது காவல்துறையினருக்கும், தீட்சிதர்களுக்கும் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் சுமூகதீர்வு ஏற்படசெய்தனர். இந்த திருவிழா கூட்டத்தில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த இரு பெண்களிடம் 9 பவுன் தங்க சங்கிலியை திருடர்கள் திருடிவிட்டனர்.
புதன் மாலை தேர் நிலைக்கு வந்த பிறகு சாமியை ஆயிரம் கால் மண்டபத்தில் தங்கவைப்பார்கள். சாமிக்கு வியாழன் அதிகாலை லர்ச்சாசணை பூஜை மற்றும் அபிஷேகத்தை தீட்சிதர்கள் செய்வார்கள். இதனைதொடர்ந்து மதியம் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்வார்கள். இதனைதொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் நடராஜர்,சிவகாசுந்தரி சிலைகளை தீட்சிதர்கள் மேலதாள முழங்க நடனம் ஆடிகொண்டு பக்தர்களுக்கு தரிசனம் காட்டுவார்கள். இந்த தரிசன விழாவுக்கு சிவ பக்தர்கள் பொதுமக்கள் காலையில் சாப்பிடாமல் தரிசனம் பார்த்துவிட்டு தான் சாப்பிட வேண்டும் என்று தரிசனம் முடியும் வரை கோயிலிலே இருப்பார்கள். நாளை (வியாழன்) கோயிலில் கூட்டம் பல லட்சக்கணக்கில் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயக்குமார் செய்து வருகிறார். பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்துள்ளது.