Skip to main content

"அவர் உயிருடன் இருந்தால் நான் குடிக்கத் தடையாக இருப்பார்" - அக்கா கணவரைக் கொன்ற இளைஞர்...

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

Anger at being advised not to drink! Real estate person case

 

மது குடிக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கியதால் ஆத்திரம் அடைந்த பட்டதாரி வாலிபர், அக்கா கணவரைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம், சாமிநாதபுரம் அல்ராஜ் தெருவைச் சேர்ந்தவர் கோகுல்நாத் (29). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. 

 

கோகுல்நாத் வீட்டிலேயே மனைவியின் தந்தை சந்திரசேகர், தாயார் மலர், தம்பி பாலமுருகன் (23) ஆகியோரும் ஒன்றாக வசிக்கின்றனர். பாலமுருகன், பி.எஸ்.சி. கணினி அறிவியல் படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். அதேநேரம் அவர் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இது தொடர்பாக அவரை கோகுல்நாத் பலமுறை கண்டித்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை (ஆக. 30) இரவும் பாலமுருகன் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

 

அவருக்கு கோகுல்நாத் வழக்கம்போல் அறிவுரை கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வீட்டிலிருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இரவு, படுக்கை அறையில் பாலமுருகன் தனது பெற்றோருடன் படுத்திருந்தார். வீட்டு வராண்டாவில் கோகுல்நாத், மனைவி, குழந்தை ஆகியோர் படுத்துக் கொண்டனர். செவ்வாய்க்கிழமை (ஆக. 31) அதிகாலை போதை தெளிந்து எழுந்த பாலமுருகன், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த கோகுல்நாத் மீது திடீரென்று சுத்தியலால் சரமாரியாகத் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோகுல்நாத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர் ஆகியோர் அங்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த கோகுல்நாத்தை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து, வீட்டிலிருந்த பாலமுருகனை கைது செய்தனர். சடலம், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

விசாரணையில், ''குடிபோதையைக் கைவிடுமாறு தினமும் அறிவுரை சொன்னதால் அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. அவரால்தான் என் பெற்றோரும், அக்காவும் என் மீது வெறுப்புடன் நடந்து கொள்கின்றனர். அவர் உயிருடன் இருந்தால் நான் மது குடிக்கத் தடையாக இருப்பார் என்பதால் அவரைக் கொன்று விட்டேன்,'' எனத் தெரிவித்துள்ளார். குடிபோதையைக் கைவிடும்படி அறிவுரை கூறியதால் அக்கா கணவரை இளைஞர் அடித்துக் கொலை செய்த சம்பவம் சாமிநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்