கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்ட ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து உருவாகும் கொசஸ்தலை ஆறு திருவள்ளூர் மாவட்டம் வழியாக பூண்டி ஏரியில் கலக்கிறது. இந்த ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை சித்தூர் பகுதியில் அணைக்கட்டி, ஆந்திர மாநில அரசு தடுத்துத் தேக்கியுள்ளது. இந்த நிலையில், கொசஸ்தலை ஆற்றில் இரண்டு இடங்களில் புதிய அணை கட்டுவதற்காக 177 கோடி ரூபாயை அம்மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சித்தூர் மாவட்டத்திலும், நகரி அருகிலும் இந்த அணைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. அணைகள் கட்டிய பிறகு, அந்த பகுதிகளில் சுமார் 9,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அணைகள் கட்டும் பணிகளுக்கு இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் டெண்டர்கள் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணைகள் கட்டப்பட்டால், தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராத நிலை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஆந்திர மாநில அரசின் அணைக்கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், ஆந்திரா மற்றும் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.