ராமநாதபுரம் மாவட்டம், வைகை நதியின் முகத்துவாரத்தில் அமைந்த ஒரு இயற்கைத் துறைமுகம், 'அழகன்குளம்'. இவ்வூர் 2,400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், இவ்வூர் கோவிலுள்ள கல்தொட்டியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஒரு கல்வெட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழகன்குளம் கடற்கரையோரம் உள்ள சேதுபதிகள் காலத்தைச் சேர்ந்த சத்திரத்துக்குச் செல்லும் வழியில் உள்ள அழகியநாச்சி அம்மன் கோவில் கிணற்றடியில் உள்ள கல்தொட்டியில், எழுத்துகள் இருப்பதாக அழகன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் அசோகன் கொடுத்த தகவலின்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு அக்கல்வெட்டைப் படி எடுத்துப் படித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, கடற்கரை மணற்பாறையால் செய்யப்பட்ட கல்தொட்டி 3 அடி நீளமும், 2 அடி அகலமும் உள்ளது. இதன் மேல் விளிம்பிலும் அதன் ஒரு பகுதியிலும் 6 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டு உள்ளது. "அட்சய ஆண்டு, ஆவணி மாதம் 25 -ஆம் நாள், அழகன்குளம் அழகிய நாயகி அம்மனுக்கு, அவ்வூரைச் சேர்ந்த நாச்சியப்ப முதலி மகன் அரியவன் முதலி என்பவர் கல்தொட்டி செய்து கொடுத்துள்ளார்" எனக் கல்வெட்டில் சொல்லப்பட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள தமிழ் ஆண்டுக்குரிய ஆங்கில ஆண்டு 1926 ஆகும். வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில் உள்ள அம்மன் கோயிலான இது 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் மருதுபாண்டியர்கள் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.