நாட்டைக் காக்கும் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களை 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்கிறோம். அதேபோல், மக்களைக் காக்க கரோனாவுடன் போரிட்டு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறோமோ, அதேபோல் இறுதி மரியாதை செய்ய வேண்டும். ஒருவேளை அந்த அளவுக்குப் பெரிய மனசு இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் மனிதர்களாகவாவது கருதி மருத்துவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய பொது மக்கள் அனுமதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இன்னும் அதிக வேதனையை அளிக்கிறது. கரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்த மருத்துவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகளை இழைப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், புகழ்பெற்ற நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருத்துவம் பயனின்றி நேற்றிரவு காலமானார். கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்களும், நண்பர்களும் சென்ற போது அங்குள்ள மக்கள் ஒன்று கூடி, ‘‘கரோனாவால் உயிரிழந்தவரை தாங்கள் வாழும் பகுதியில் அடக்கம் செய்தால், அவரது உடலில் இருந்து தங்களுக்கும் நோய் பரவி விடும்’’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவரது உடலை அடக்கம் செய்ய வந்தவர்களை தாக்கியுள்ளனர். அதன்பின் அவரது உடல் வேலங்காடு இடுகாட்டில் காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
பொதுமக்களின் இந்தச் செயல் அவர்களின் அறியாமை, விழிப்புணர்வின்மை, தேவையற்ற அச்சம் இவற்றுக்கெல்லாம் மேலாக சுயநலம் ஆகியவற்றையே காட்டுகிறது. ஒருபுறம் கரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களைப் பாராட்டும் வகையில், ஊரடங்கின் போது ஒரே நேரத்தில் கைகளைத் தட்டி சிறப்பிக்கிறோம். மறுபுறம் உயிர்க்காக்கும் முயற்சியில் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த முரண்பாடு தான் மனதைக் காயப்படுத்துகிறது. உண்மையில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதால் அந்தப் பகுதியில் யாருக்கும் நோய் தொற்றாது. மாறாக உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடுவது தான் அவர்களிடையே கரோனா பரவ வழிவகுக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
கரோனா வைரசை மருத்துவர்கள் விரும்பிச் சென்று தொற்ற வைத்துக் கொள்வதில்லை. மாறாக, கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தங்களின் உயிரை பணயம் வைத்து, சிகிச்சை அளிக்கும் போது தான் கரோனா தாக்குதலுக்கு ஆளாகின்றனர். கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை 8 அடி ஆழத்தில் புதைத்த பிறகும் அதிலிருந்து தங்களுக்கு கரோனா பரவும் என்று பொதுமக்கள் அர்த்தமற்ற வகையில் அஞ்சுகின்றனர். ஆனால், மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக அருகில் இருந்து மருத்துவம் அளிக்கின்றனர். மருத்துவர்களும் கரோனா பாதிப்புக்கு ஆளாகி விடக்கூடாது என்ற சுயநலத்துடன், சிகிச்சை அளிக்க மறுத்தால் உலகமே சுடுகாடாக மாறிவிடக்கூடும். எனவே, கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஓரிடத்தில் புதைப்பதால் அந்தப் பகுதியில் நோய் பரவாது என்பதை உணர்ந்து, மருத்துவர்களை அவமதிக்கும் செயல்களில் எவரும் ஈடுபடக்கூடாது. அத்தகைய செயல்களில் ஈடுபட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே, சென்னை தனியார் மருத்துவமனையில் கரோனா தாக்குதலால் உயிரிழந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய அம்பத்தூர் மற்றும் திருவேற்காடு பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வேறு இடத்தில் நள்ளிரவில் அடக்கம் செய்யப் பட்டது. அதேபோல், தனியார் மருத்துவமனைகளில் அதிக ஊதியத்துடன் பணியாற்ற கிடைத்த வாய்ப்புகளை மறுத்து விட்டு, நீலகிரி மாவட்டத்தின் மிக மிக பின்தங்கிய பகுதியான தெங்குமரஹடா என்ற பழங்குடி கிராமத்தில் பணியாற்றிய வந்த ஜெயமோகன் என்ற 29 வயது மருத்துவர் டெங்கு காய்ச்சலால் இறந்தார். அவரது உடலை கோவை மாவட்டம் சிறுமுகை அருகில் உள்ள சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்வதற்காக கொண்டு சென்ற போது, அவர் கரோனாவால் இறந்து விட்டதாக கூறி, அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த அவரது தாயார் தற்கொலைக்கு முயன்ற சோகமும் நிகழ்ந்தது. மேகாலயா மாநிலத்தில் பெத்தானி மருத்துவமனையை நிறுவி மக்களுக்கு சேவை செய்து வந்த மருத்துவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போது, அவருக்கு உள்ளூர் மக்களால் இத்தகைய அவமரியாதையே கிடைத்தது.
தமிழ்நாட்டு மக்களை நான் தலைவணங்கி கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்று தான்....
போர்க்காலங்களில் நாட்டைக் காக்க தங்களின் உயிரைப் பணயம் வைத்து போர் புரிபவர்கள் நமது இராணுவ வீரர்கள் தான். அதேபோல், கண்ணுக்குத் தெரியாத எதிரியான கரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து களத்தில் நின்று போராடுபவர்கள் மருத்துவர்கள் தான். அவர்களை நாம் கடவுளாகப் பார்க்க வேண்டும். அவர்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. நாட்டைக் காக்கும் போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களை 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்கிறோம். அதேபோல், மக்களைக் காக்க கரோனாவுடன் போரிட்டு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறோமோ, அதேபோல் இறுதி மரியாதை செய்ய வேண்டும். ஒருவேளை அந்த அளவுக்கு பெரிய மனசு இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் மனிதர்களாகவாவது கருதி மருத்துவர்களின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய பொது மக்கள் அனுமதிக்க வேண்டும்.
மற்றொருபுறம் தமிழ்நாட்டில் இதுவரை கரோனா பாதிப்புக்கு மருத்துவம் அளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 12-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இனியும் இத்தகைய பாதிப்புகள் தொடருவதைத் தடுக்க மருத்துவப் பணியாளர்களுக்கு இன்னும் கூடுதலான பாதுகாப்பு கவச உடைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.