ரத்தத்தை உறையவைக்கும் அடர்ந்த அமேசான் மற்றும் ஆப்ரிக்ககாடுகளில் திரிவதும், அபூர்வமானதும் பயங்கரமான ஆள் விழுங்கி மலைப்பாம்பு அனனோண்டா. அதுபற்றிய மேற்கத்திய திரைப்படம் வெளி வந்தபோதுதான் அதன் மகாபயங்கரம் கண்டு மனிதகுலம் அச்சத்தில் உறைந்தது. தன் எதிரி எவ்வளவு தூரம் ஓடினாலும், உச்சத்திற்குப் போனாலுமே நொடியில் வளைத்து விடக் கூடிய பல அடிகள் நீள சைசும், பனைமரத்தின் அடிப்பாக கனமும் கொண்டவைகள் அனகோண்டாக்கள்.
அந்த சைஸ் அனகோண்டா நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் மலைக்காடுகளில் திரிவதை தற்செயலாக அங்குசென்ற இளைஞர்கள் அதைக் கண்டு பதறியிருக்கிறார்கள். அப்படியே அதை தங்களின் செல்லின் வீடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள்.
கடையநல்லூரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சிமலை உள்ளது. அதன் அடிவாரத்திலிருப்பது பெரியாற்றுப்படுகையின் பக்கமுள்ளது கல்லாறு கிராமம். இந்தக் கிராமத்தின் மேல்புறம் கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பீட்டில் வரும் மூங்கில் காடு உள்ளது. சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியைக் கொண்ட அடர்ந்த இந்தக் காட்டில் தேக்கு மரங்கள் அடுத்து மான், மிளா, காட்டெருமைகள், பாம்புகள் போன்ற வனவிலங்குகளும் உள்ளன.
இந்த பீட்டின் அடிப்பகுதியில் கல்லாற்றைச் சேர்ந்தவர்கள் விவசாயம் செய்ய, குளிப்பதற்காகச் செல்வதும் உண்டு. அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையநல்லூர் பகுதியின் இளைஞர்கள் சிலர். கல்லாறு மலைக்கு சென்றுள்ளனர். அது சமயம் அவர்கள் அங்குள்ள ஓடையைக் கடக்கும் போது சுமார் 20 அடி நீளம் கொண்ட கணிப்புக்கும் எட்டாத கனம் கொண்ட சைசில் மலைப் பாம்பு ஒன்று கிடந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ந்து பின் வாங்கியுள்ளனர். பின் அதை தங்களின் செல் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். சில நிமிடங்களுக்குப் பின்னர், தலையும், வாலும் தெரியாத அந்த மலைப்பாம்பு நெளிந்து செடிப் புதருக்குள் மறைந்திருக்கிறது.
இந்தக்காட்சி நண்பர்கள் மூலமாக வாட்ஸ் அப்பில் பரவியதையடுத்து அலர்ட் ஆன வனத்துறையினர் கல்லாறு மற்றும் மலையடிவாரக் கிராமங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். நாங்கள் ஓடைப் பக்கம் வரும் போது சாலையில் ஸ்பீடு பிரேக்கர் தான் இருக்கிறதோ என்று சந்தேகப்பட்டு நின்று கவனித்தபோது பளபளப்பான அது நெளிந்தது தெரிய வந்தபோது தான், மலைப் பாம்பு என்று உணர்ந்து பதறினோம் பிறகு தைரியமாக அரிவாளுடன் பின் தொடரும் போது அது புதருக்குள் போய் விட்டது. ஆங்கிலப் படங்களில் பார்க்கிற அச்சு அசல் அனகோண்டா பாம்பு போன்று தெரிகிறது. அருகில் ராஜநாகம் ஒன்று படமெடுத்ததையும் வீடியோ செய்துள்ளோம் என்கிறார்கள் இளைஞர்கள் பீதி விலகாமல். அனகோண்டாக்களையும், ராட்சத மலைப் பாம்புகளையும் கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகள் அமேசான் காடுகளுக்கு நிகராகியிருக்கிறது.