திருவாடானையில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு பூங்காவில் விஷமிகள் உள்ளே புகுந்து உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உடற்பயிற்சி கருவிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பல லட்சம் அரசு பணம் விரயமாகியுள்ளதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அரசு பூங்கா தமிழக அரசால் ரூபாய் 20.71 லட்சம் செலவில் கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது. இந்த பூங்காவில் தினமும் காலை மாலை வேளைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சி மற்றும் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்கின்றனர்.
உடற்பயிற்சி கூடத்தில் பல லட்சம் செலவில் உடற்பயிற்சி உபகரனங்கள் உள்ளது. இதில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தார்கள். இந்நிலையில் வழக்கம்போல் பயிற்சி செய்ய சென்ற இளைஞர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் உள்ளே உள்ள உடற்பயிற்சி சாதனங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டும் உட்காரும் இருக்கைகள் பிளேடால் கிழித்து சேதப்படுத்தியும் உள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இப்படி உபகரணங்களை சேதப்படுத்திய விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்க, காவல்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.