வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ளது அரங்கல்துருகம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்டது அரங்கல்துருகம், புது அரங்கல்துருகம், சுட்டக்குண்டா, பொன்னப்பள்ளி, காரப்பட்டு , காட்டு வெங்கடாபுரம் மத்தூர் கொல்லை , அபிகிரிப் பட்டரை என பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து காரப்பட்டு மற்றும் காரப்பட்டு காலனியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி நீண்ட காலமானதால் அதன் தூண்கள்கள் சேதமடைந்தன. இதனால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நிரப்பாமல் ஊராட்சி நிர்வாகம் நிறுத்திவைத்தது.
இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அதிகம் சிரமப்பட்டு வந்தனர். இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விடும் அபாய நிலையில் உள்ளதால் பேர்ணாம்பட்டு ஒன்றிய நிர்வாகம், இதை உடனடியாக இடித்துவிட்டு வேறு கட்ட வேண்டும் என இந்த இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் சேதமடைந்த அந்த தூண்கள் தண்ணீர் ஊறி இன்னும் சேதமடைந்து விழுந்துவிடும், அந்த நேரத்தில் அங்கே ஆட்கள் இருந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்படுத்திவிடும், அதற்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர்.