






திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ளது நெக்குந்தி கிராமம். அங்கு டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கொடியுடன் கூடிய அம்பேத்கர் பீடம் மற்றும் அம்பேத்கர் சுவர் சித்திரம் அமைந்துள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் படம் அவமதிப்பு செய்யப்பட்டதாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் இளைஞர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக போலீசரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் நினைவு பீடம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை தாண்டி தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அந்த பகுதியில் ஸ்பீட் பிரேக்கர் ஒன்றை அமைத்தனர். அதை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்பீட் பிரேக்கரை வெட்டி அப்புறப்படுத்தினர். ஏற்கனவே இது தொடர்பான பிரச்சனை அங்கு நடந்துள்ளது. இந்நிலையில் அதனையொட்டி அம்பேத்கர் புகைப்படத்தின் மீது அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அவமதிப்பை ஏற்படுத்தியது யார் என்பது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர்.