கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் விருத்தாசலம் சாலையை ஒட்டி உள்ளது நரிக்குறவர் இன மக்களின் குடியிருப்பு. இங்கு 32 வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இடிந்து விழும் நிலையில் இருந்துவரும் இந்தக் குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என நரிக்குறவர் குடியிருப்பு வாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உட்பட பலருக்கும் மனு அனுப்பி வந்தனர். அதோடு பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து அப்போது நமது நக்கீரன் இணையதளத்தில் செய்தியும் வெளியிட்டோம். அப்போதைய அதிமுக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அந்த மக்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்கவில்லை. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில் பாழைடைந்து கிடந்த இந்த குடியிருப்பு வீடுகளை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள அனைத்து குடியிருப்புகளும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக அதே இடத்தில் மாற்று குடியிருப்பு கட்டித் தருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
இடிந்து விழும் நிலையில் இருந்த குடியிருப்பு வீடுகள் இடிக்கப்பட்டு முதல் கட்டமாக அனைவருக்கும் தற்காலிக குடியிருப்பு ஷெட்டுகள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகளும் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு ஆகியோரும் அறிவித்துள்ளனர். இதைக் கேட்ட நரிக்குறவர் குடியிருப்பு வாசிகள் அனைவரும் தமிழக முதல்வருக்கும், நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் நரிக்குறவர் சங்கத் தலைவர் ரவி உட்பட பலரும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மழை வெயில் காலங்களில் ஒதுங்க இடம் என்று தவித்து வந்த நரிக்குற இன மக்களுக்கு விரைவில் மாற்று குடியிருப்பு ஏற்பாடுகள் செய்யும் பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள் இது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.