நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை என்று சொன்ன கலைஞருக்கு குமரி மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இரங்கல் ஊர்வலமும் மௌன அஞ்சலியும் செலுத்தி கண்ணீா் வடித்தனர்.
தேசிய கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட குமரி மாவட்டத்தில் மாநில கட்சிகள் தனியாக கால் ஊன்ற முடியாத நிலையில் இருந்த அந்த காலகட்டத்தில் நெல்லையில் நடந்த ஓரு பொதுக்கூட்டத்தில் நெல்லை எனது எல்லை குமரி எனது தொல்லை என்று கலைஞர் பேசினார்.
அதே கலைஞர் கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவருக்கு வானூயா்ந்த சிலை வைத்து குமரிக்கு பெருமை சேர்த்தார். மேலும், அதே கடற்கரை ஓரத்தில் காமராஜருக்கு மணி மண்டபமும் கட்டினார். அதோடு வில்லுக்குறியில் மாம்பழத்தாறு அணை, ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை என உள்ளிட்ட பல திட்டங்களை குமரி மாவட்ட மக்களுக்கு கொண்டு வந்து குமரி மக்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தார்.
இந்தநிலையில் கலைஞரின் மரணத்தால் நிலை குலைந்த குமரி மக்கள் கட்சி வேறுபாடியின்றி அந்த துக்கத்தில் பங்கெடுத்தனா். குறிப்பாக திருவிதாங்கோடு வட்டம் காலணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுத்த கலைஞருக்கு அந்த மக்கள் கண்ணீரோடு அதை நினைவுகூா்ந்து துக்கத்தில் காணப்பட்டனர்.
அதே போல் கலைஞர் வீட்டுமனைபட்டா கொடுத்த தக்கலை பகுதியில் வலியகரை காலணி, குளச்சலில் ரீத்தாபுரம் காலணி, திக்கணங்கோட்டில் கொல்லாய் காலணியில் வசிக்கும் மக்கள் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக கலைஞரின் படத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி கண்ணீா் வடித்தனர்.
இதேபோல் அரசியல் கட்சியினரும் அனைத்து பகுதியிலும் இரங்கல் ஊர்வலமும் மௌன அஞ்சலியும் செலுத்தி கலைஞர் மீதுள்ள பற்றை வெளிகாட்டினார்கள். அதே போல் வா்த்தக சங்கத்தினரும் ஓட்டு மொத்த கடைகளையும் அடைத்து அந்த துக்கத்தில் பங்கெடுத்தனர்.
இந்தநிலையில் கலைஞரின் மறைவு செய்தியை கேட்டு திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (60), கனகப்பபுரத்தை சோ்ந்த சாமிகண் (62) ஆகிய இருவரும் அதிர்ச்சியில் உயிரிழந்தனர். ஓட்டு மொத்த குமரியும் நேற்று துக்கத்தில் ஆழ்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.