
தமிழ்நாட்டில் கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததும் ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்திவருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கரோனா பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் இரவு 9 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டதைக் குறைத்து, மாலை 6 மணியோடு கடைகள் அடைக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தடுத்து சில மாவட்ட நிர்வாகங்களும் அந்த நடவடிக்கையை எடுத்துவருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்திலும் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாலை 5 அல்லது 6 மணியோடு கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றை மூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் முருகேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடந்தது.
இதில் பல்வேறு வர்த்தக, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைக் கூறியுள்ளனர். ‘கரோனாவைக் கட்டுப்படுத்த உங்கள் ஒத்துழைப்பு தேவை, அதற்கு மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைக்குத் துணைபுரியுங்கள்’ என அரசு அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இன்றோ, நாளையோ திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்குவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதிவரை மாலை 5 மணிக்கு மேல் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், ஹோட்டல்கள் என அனைத்தும் இயங்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.