கரோனா கிருமி தொற்று பரவாமல் இருக்க 'தனித்திரு வீட்டிலிரு' என்று சொன்ன அரசாங்கம் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கடைகளைத் திறக்க அனுமதி அளித்ததுடன் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகளை மூடினார்கள். இதனால் மது குடிப்போரில் 60 சதவீதம் பேர் குடியை மறந்துவிட்டனர். இதேபோல தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்களும் பெண்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு 7- ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து ஆதார் அட்டை, குடை, முகக் கவசத்துடன் வரவேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது. இருப்பினும் விதிகளை மீறி கூட்டம் கூடியது. இதனால் கரோனா தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக மீண்டும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகள் மூட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று (08/05/2020) விசாரணைக்கு வந்தபோது ஊரடங்கு நீடிக்கும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மதுபானக்கடையை ஊரடங்கு உத்தரவு முடியும் (மே- 17 ஆம் தேதி வரை) திறக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கூறியதால், அதனைக் கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கமல்சுதாகர், வழக்கறிஞர் கஜேந்திரன், சகுபர் சாதிக், தர்மராஜ் ஆகியோர் பழைய பேருந்து நிலையத்தில் இனிப்புகள் கொடுத்துக் கொண்டாடினர்.