தமிழகத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்.31 ஆம் தேதி வரை நீட்டித்து நேற்று தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் நவம்பர் 1 ஆம் தேதிமுதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் பெற்றோர்களின் கருத்தின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''அதிக நாட்கள் கழித்து மாணவர்கள் ஸ்கூல் என்விராய்மென்டுக்கு வர இருக்கிறார்கள். அரசு, மருத்துவ வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டு நவ்.1 முதல் பள்ளிகளைத் திறக்கப் போகிறோம் என்று சொல்லிவிட்டால் எல்லா பொறுப்பும் எங்களுக்கானது. எனவே மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் முன்னேற்பாடுகளைச் செய்கிறோம்.
குழந்தைகளைப் பொறுத்தவரை முன்பே சொன்னதுதான், கண்டிப்பாக வர வேண்டும், வந்து 7 மணிநேரம், 8 மணிநேரம் உட்கார்ந்தே இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. முதலில் பள்ளியைத் திறக்கிறோம் வீட்டை விட்டு வெளியே வாருங்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கிறது. குழந்தைகள் தனிமையில் இருக்கும்பொழுது என்னென்னமாதிரி எண்ணங்கள் வரக்கூடாது என்ற வகையில்தான் எல்லாரும் பள்ளிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அப்படி வரும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு என்னென்ன பாதுகாப்பு முறைகளைக் கொண்டுவர வேண்டுமோ அதை அரசு கொண்டுவரும்' என்றார்.