கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று முன்தினமும், நேற்றும் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பாகியது.
நேற்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவுச் சங்க சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஆளுநர் உரையின் மீது நன்றியுரை ஆற்றினார். அதன்பின் சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 6 ஆம் தேதி பேரவையில் பேசிய முதல்வர், ''நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. மருத்துவத்துறையில் தமிழ்நாடே முன்னோடி மாநிலமாக உள்ளது. மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிடுகிறது. எந்த ஒரு நுழைவுத்தேர்வு என்றாலும் அது ஏழை, எளிய மாணவர்களைப் பாதிக்கும். நீட் விலக்கு மசோதா ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. நீட் விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. எனவே இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டினை எட்டுவதற்கு சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை நாளை மறுநாள் 8/1/2022 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம் அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து நீட்டுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும்'' என்றார்.
அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது .கூட்டத்தில் கலந்துகொள்ள சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.