தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.ரவி கூறுகையில், "அரசாணை 17 என்பது ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா 15 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய்யும் வழங்குவதற்கான அரசாணை ஆகும்.
இந்த அரசாணையில் 12 லட்சத்து 13 ஆயிரத்து 882 பேர்களுக்கு மட்டுமே பதிவு செய்துள்ளதாகக் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் 2020- ஆம் ஆண்டு பிப்ரவரி 29- ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 31 லட்சத்து 17 ஆயிரத்து 884 கட்டுமான தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
அப்படியானால் 12 லட்சத்து 13 ஆயிரம் பேர் மட்டுமே பதிவைப் புதுப்பித்து இருக்கிறார்கள் என்கிற அடிப்படையிலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் பதிவு புதுப்பித்தலுக்கு மட்டுமே இந்த உதவி கிடைக்கும் என்கிற தகவல் இதன் மூலம் வெளியாகிறது.
அரிசியும், பருப்பும், சமையல் எண்ணையும் மாவட்ட ஆட்சியர் விநியோக உரிமையை எடுத்து விநியோகிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. நிதியுதவிக்கான அரசாணை இன்னும் வெளிவரவில்லை. இருந்தாலும் வங்கிக் கணக்கில் செலுத்துவது என்று தெரிய வருகிறது.
பதிவு செய்த அனைவருக்கும் உதவித்தொகையும், உணவுப் பொருட்களும் வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் சங்கத்தின் நிலைப்பாடாவும், கோரிக்கையாகும் இருக்கிறது. அதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஊரடங்கிற்குப் பிறகு அதற்காகப் போராடவும் செய்வோம். இப்போது இந்த நிதி உரியவர்களுக்குப் போய் சேர்வதற்கான ஏற்பாடுகளை நலவாரியம் செய்கிறபோது நாங்கள் கண்காணிக்கச் செய்வோம், எங்கள் கிளைகளுக்குத் தகவல் சொல்லி முறையாக விநியோகிக்கப்படுகிறதா? என்பதைக் கவனித்து வருகிறோம்" என்றார்.