Skip to main content

கல்லூரி மாணவர் கொலை... கூலிப்படை தலைவன் வெறிச்செயல்!

Published on 08/09/2019 | Edited on 19/12/2021

சேலம் அருகே, நண்பர்கள் குழுவைவிட்டு திமுகவில் சேர்ந்ததால் கல்லூரி மாணவரை வஞ்சம் வைத்து தீர்த்துக்கட்டி இருக்கிறது கூலிப்படைத் தலைவன் தலைமையிலான கும்பல். இந்த கொலைக்கு ரிவேஞ்ச் தீர்க்கும் வேலைகள் நடக்கும் என்பதால், ஒட்டுமொத்த ஊரே கிலியில் உறைந்து கிடக்கிறது.

சேலத்தை அடுத்துள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் & வசந்தி தம்பதியின் ஒரே மகன் திலீப்குமார் (19). ராசிபுரம் அரசுக்கல்லூரியில் பி.ஏ., பொருளியல் இறுதியாண்டு படித்து வந்தார். செப்டம்பர் 5ம் தேதி இரவு, நண்பர்கள் அழைப்பதாக தாயிடம் கூறிவிட்டு தெருமுனைக்குச் சென்றவரை, மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் சூரிக்கத்தியால் தாக்கி கொடூரமாக கொலை செய்திருக்கிறது.

திலீப்குமாரின் வலப்பக்க முழங்காலின் மேல், கீழ் பகுதிகளில் ஆழமான வெட்டு விழுந்ததால் அவரால் தப்பித்து ஓடமுடியவில்லை. அதற்குள் முதுகுப்பக்கம் ஆழமாக பாய்ந்த இரும்பு கம்பியால், நிறைய குருதி வெளியேறி இருந்தது. தலை, உள்ளங்கைகள், மணிக்கட்டு ஆகிய இடங்களிலும் வெட்டுக்காயங்கள் இருந்தன. உடற்கூறாய்வில், முதுகுப்பக்கம் குத்திய இரும்பு கம்பி, அவருடைய இருதயம் வரை பாய்ந்திருப்பது தெரிய வந்தது. இன்னும் இரண்டு அங்குலம் இறங்கியிருந்தாலும் இருதயத்தை பெயர்த்திருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

salem college student incident mallure police investigation


திலீப்குமாரைக் கொன்றவர்கள் வேறு யாரும் அல்ல. ஓராண்டுக்கு முன்புவரை நகமும் சதையுமாக பழகி வந்த, அவருடைய நண்பர்கள்தான் இந்த படுபாதக செயலைச் செய்திருக்கிறார்கள். நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் வைரம் என்கிற திருநாவுக்கரசு (23), அதே ஊரைச்  இரண்டு சிறுவர்கள் என மூவரும்தான் கொலை செய்ததாக ஊரே சொல்கிறது. மல்லூர் காவல்துறையினரும் அவர்களை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

செப். 6ம் தேதி, மகனை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திலீப்குமாரின் உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளுக்கு ஆளுங்கட்சியினரின் செல்வாக்கு இருப்பதால் அவர்களை தப்ப வைக்க சதி நடப்பதாகவும் திலீப்குமாரின் தாயார் கூற, இந்த வழக்கு வேறு பாதையில் பயணிப்பதை அறிந்த காவல்துறை, அன்றைய தினமே மூவரையும் தூக்கி இருக்கிறது. 

கொலைக்கான காரணம் என்ன? இதில் உள்ள அரசியல் பின்னணி என்ன?. நாமும் களத்தில் இறங்கி விசாரித்தோம்.

கொலையாளிகள் மூவருமே திலீப்குமாருக்கு நெருக்கமான நண்பர்களாக இருந்துள்ளனர். எல்லோருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாழிக்கல்பட்டியில் இளையபாரதம் நண்பர்கள் குழு என்ற பெயரில் இயங்கி வந்துள்ளனர். திருநாவுக்கரசு, அதிமுகவைச் சேர்ந்த மனோன்மணி எம்எல்ஏ, மல்லூர் ஒன்றிய அதிமுக  செயலாளர் ஏர்வாடி ஜெகநாதன் ஆகியோர் சொல்லும் வேலைகளை அந்த ஊரில் செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு கூலிப்படை தலைவன்போல செயல்பட்டு வந்துள்ளார். நண்பர்கள் குழுவையும் கட்சி வேலைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார் வைரம் என்கிற திருநாவுக்கரசு. இதில் திலீப்குமாருக்கு உடன்பாடு இல்லாததால், அவருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார். இந்த நிலையில்தான் ஓராண்டுக்கு முன்பு, திலீப்குமார் தன் நண்பர்கள் ஐம்பது பேருடன் திடீரென்று திமுகவில் சேர்ந்தார். 

இதுதான் திருநாவுக்கரசு உடனான நட்பை திலீப்குமார் முறித்துக்கொள்ளவும் காரணமாக அமைந்தது. எல்லோரும் நண்பர்களாக இருந்தவரை விநாயகர் சதுர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடி வந்த நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது திலீப்குமார் தரப்பும், திருநாவுக்கரசு தரப்பும் ஒரே ஊருக்குள் தனித்தனியாக சிலைகளை நிறுவி, விழா கொண்டாடி இருக்கிறது. 

salem college student incident mallure police investigation


சதுர்த்தியின் மூன்றாம் நாளான செப். 4ம் தேதியன்று விநாயகர் சிலையை மேட்டூரில் கரைப்பதற்காக திருநாவுக்கரசுவும் நண்பர்களும் ஊர்வலமாக நடனமாடியபடியே சென்றுள்ளனர். அப்போது திலீப்குமார், திருநாவுக்கரசுவைப் பார்த்து கைகளால் ஏதோ சைகை காட்டியதாக சொல்கிறார்கள். தன்னை கொன்று விடுவதாக திலீப்குமார் சைகையால் காட்டியதாக புரிந்து கொண்ட திருநாவுக்கரசு, தன் நண்பர்களான இரண்டு சிறுவர்கள் என 3 பேரை அழைத்துக்கொண்டு செப். 5ம் தேதியன்று இரவு, ஊரடங்கிய வேளையில், திலீப்குமாரை வீடு அருகே வைத்து இரும்பு கம்பி, சூரிக்கத்திகளால் தாக்கி படுகொலை செய்திருக்கிறது. 


தடுக்கச் சென்ற அவருடைய தாயார் வசந்தியை வயிற்றில் எட்டி உதைத்திருக்கிறார்கள். அவருக்கும் வலது கையில் லேசான கத்திக்குத்து விழுந்திருக்கிறது. திலீப் குமாரை காப்பாற்ற முயன்ற அவருடைய உறவினர் மகன் சரண் என்பவருக்கும் கை, நெற்றி, கால் பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது.


''திலீப்குமாரை மூன்று பேர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அவனை போடுடா போடுடா என்று சொன்னதைக் கேட்டு பக்கத்தில் இருந்த நானும் இங்கே ஓடி வந்தேன். அதற்குள் அவருடைய அம்மா வசந்தியும், எங்க உறவினர் பையன் சரணும் வந்துவிட்டனர். ஆனால் அதற்குள் அழகு என்பவரின் வீட்டு சுவரில் சாய்த்து வைத்து திலீப்பை சூரிக்கத்தியாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாக குத்தி விட்டனர். தடுக்கச்சென்ற அவருடைய அம்மாவை வயிற்றிலேயே எட்டி எட்டி உதைத்தனர். திலீப்பின் முழங்காலிலும் வெட்டு விழுந்ததால் தத்தித்தத்தி அழகுவின் வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். 

 

salem college student incident mallure police investigation


நானும் பின்தொடர்ந்து சென்றேன். திலீப்குமாரால் நிற்கக்கூட முடியாமல் சுருண்டு விழுந்தார். சைகையால் கதவை சாத்தச் சொன்னார். இதற்குள் திலீப்குமாரை கத்தியால் குத்திய மூவரும் தப்பி ஓடிவிட்டனர். நாங்கள் ஆம்புலன்சை வரவைப்பதற்குள் திலீப்குமார் செத்துவிட்டார்,'' என்கிறார் திலீப்குமாரின் வீடு அருகே வசிக்கும் கனிமொழி. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சியங்களுள் அவரும் ஒருவர்.

ஒரு பெரும் களேபரம் நடந்துள்ள நிலையில், நாழிக்கல்பட்டி பிரிவு சாலையோரம் மட்டுமே இரண்டு காவலர்கள் பேட்ரல் வண்டியில் நின்று கொண்டிருந்தனர். அங்கிருந்து முக்கால் கி.மீ. தூரம் சென்றால்தான் திலீப்பின் வீடு. வழியில் ஒரு காவலர்கூட பந்தோபஸ்துக்கு இல்லை. 

நாம், திலீப்குமாரின் தாயார் வசந்தி, தந்தை ராஜேந்திரன் ஆகியோரைச் சந்தித்தோம். 

''என் பையன் யாருடைய வம்பு தும்புக்கும் போறதில்லீங்க. கொலை செஞ்ச மூணு பசங்களோடயும் திலீப்புக்கு என்ன பிரச்னைனு தெரியல. இப்ப ஒரு வருஷத்துக்கு மேலாக அவங்ககூட என் பையன் எதுவும் வெச்சிக்கறதில்ல. திடீர்னு விசால கிழமையன்னிக்கு சாயங்காலம் வந்து உன் பையன அடக்கி வெச்சுக்கு. இல்ல... போட்டுத்தள்ளிட்டு போய்ட்டே இருப்போம்னு திருநாவுக்கரசு, சூர்யா என்கிற சரவணன், இன்னொரு சரவணன் மூணு பேரும் வந்து என்கிட்ட சத்தம் போட்டுட்டுப் போனானுங்க. அதற்குப் பிறகுதான் என் பையன் வீட்டுக்கு வந்தான்.

அந்த திருநாவுக்கரசு எப்ப பார்த்தாலும் கத்தி, தொண்ணைய வெச்சி சுத்திக்கிட்டே இருப்பான். அதனால அவன்கூட எல்லாம் சேராதப்பானு என் பையன்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன். மறுபடியும் அவனுங்க மூணு பேரும் ராத்திரி 7 மணிவாக்குல வந்தானுங்க. பிரண்ட பார்த்துட்டு வந்துடறேன்மானு சொல்லிட்டு வீட்டுல இருந்து கிளம்பினான். என் பையனை சில பேரு தகாத வார்த்தையால திட்டற சத்தம் கேட்டு அங்கே போனேன். 

 

salem college student incident mallure police investigation


அதற்குள் என் பையனை கத்தியால குத்தி கொன்னுட்டானுங்க. பிரண்டு பிரண்டுனு போனான். இப்ப பிரண்டுங்களே அவன கொன்னுப் போட்டுட்டானுங்க....ஒத்த  புள்ளடா நீ... உனக்காகத்தான் நானும் அப்பாவும் தங்கச்சியும் உசுரோட இருக்கோம். நீதான் இந்த குடும்பத்த முன்னுக்குக் கொண்டு வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்போம். இப்ப அவனே இல்லேனு ஆகிப்போச்சு. அவனை கொன்ன மூணு பேரையும் தூக்குல போடணும். இல்லேனா நாங்க தீக்குளிச்சு செத்துப்போய்டுவோம். அ ந்த திருநாவுக்கரசுவுக்கு அதிமுக எம்எல்ஏ மனோன்மணிகிட்ட செல்வாக்கு இருக்குனுலாம் பேசிக்கிறாங்க. அதனால அவன் தப்பிச்சிடக் கூடாதுங்க,'' என்று மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுதார் திலீப்குமாரின் தாய் வசந்தி.


''திலீப்குமாருக்கு போலீஸ் ஆகணும்னு ரொம்பவே ஆசை. இதுபத்தி அவன் அவங்க அப்பாஅம்மாகிட்டக்கூட சொன்னதில்ல. ஒருநாள், போலீஸ் யூனிபார்ம்ல வந்து இந்த ஊர் முன்னாடி நிக்கணும். அதுவரைக்கும் சஸ்பென்ஸாக வைத்திருக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த போலீஸ் தேர்வைக்கூட எழுதிட்டுதான் வந்தான். அதற்குள் இப்படியாகிப்போச்சு,'' என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.


இது தொடர்பாக மல்லூர் காவல் ஆய்வாளர் வேலுதேவனிடம் கேட்டபோது, ''கொலை வழக்கில் எல்லாம் யாருடைய ரெக்கமண்டும் எடுபடாது. இப்படித்தான் யாராவது எதாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதையெல்லாம் நாம் பார்த்துட்டு இருக்க முடியுமா? எல்லாம் சட்டப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருநாவுக்கரசு தவிர மற்ற இருவரும் 18 வயதுக்குட்பட்ட சிறார் குற்றவாளிகள். அதனால் அவர்கள் பெயர்களைச் சொல்லக்கூடாது,'' என்று சட்டத்தை கறாராக பின்பற்றினார் இன்ஸ். 

 

salem college student incident mallure police investigation


இதற்கிடையே, மல்லூர் காவல் நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த குற்றவாளிகளின் உறவினர்களிடம் கேட்டபோது, ''மூன்று பசங்களுமே மனோன்மணி எம்எல்ஏ வீட்டுக்குப் போனாங்க. அவங்க சொன்னதால்தான் மூன்று பேரும் காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தார்கள்,'' என்றனர். இன்னொரு தகவலும் கிடைத்தது. மனோன்மணி எம்எல்ஏவிடம் அடைக்கலம் புகுந்து உதவி கேட்ட கொலையாளிகள், அவருடைய ஆலோசனையின்படி, அங்கிருந்து மல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஏர்வாடி ஜெகநாதனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். பின்னர் அவருடைய ஏற்பாட்டின்பேரில்தான் மூவரும் சரணடைய வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் விவரம் அறிந்தவர்கள்.


இது தொடர்பாக மனோன்மணி எம்எல்ஏவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ''இது தொடர்பாக பேச வேண்டும் என்றால் நேரில் வாருங்கள். நான் இப்போது பத்திரிகை வைத்துக்கொண்டு இருக்கிறேன்,'' என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

salem college student incident mallure police investigation


இந்த வழக்கின் முதல் குற்றவாளியான திருநாவுக்கரசு மீது ஏற்கனவே வழிப்பறி, அடிதடி என ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் மல்லூர் காவல் நிலையத்தில் பதிவாகி இருக்கின்றன. கல்வியறிவு இல்லாத அவரையும், இளம் சிறார்களையும் ஆளும் வர்க்கம் பகடையாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், திலீப்பின் கொலைக்கு வஞ்சம் தீர்ப்போம் என கனல் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் அவருடைய உறவினர்கள்.



 

சார்ந்த செய்திகள்