சேலம் மாவட்டத்தில், இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 30, 2019ம் தேதி நடந்தது. ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணிசமான வாக்காளர்களுக்கு உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களை ஒருங்கமைக்கும் பணிகளில் காவல்துறையினருடன் ஊர்க்காவல்படை (ஹோம் கார்டு) காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

உடையாப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஒன்றில், சேலம் ஊர்க்காவல் படையில் பெண்கள் பிரிவு கமாண்டராக பணியாற்றி வரும் ஜெயலட்சுமி (39) என்பவர், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் முதியோர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் பெண்களை நீண்ட நேரம் வரிசையில் காக்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து வாக்களிப்பதற்கான உதவிகளைச் செய்து கொடுத்தார்.

இந்நிலையில், காயத்ரி என்ற இளம்பெண், பால் மணம் மாறாத கைக்குழந்தையுடன் வாக்களிக்க வரிசையில் காத்திருந்தார். அவருக்கு முன்பும் சில வயதான பெண்கள் வரிசையில் நின்றதால், அவர்கள் வாக்களித்துவிட்டு வரும் வரை காயத்ரியும் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். பின்னர் அவர் வாக்களிக்கச் செல்லும்போது அவரிடம் இருந்த கைக்குழந்தையை பத்திரமாக வைத்திருப்பதாகக்கூறி, ஊர்க்காவல் படை பெண் கமாண்டர் ஜெயலட்சுமி பெற்றுக்கொண்டார்.
அவர் அக்குழந்தையை தனது மடியில் வைத்துக்கொண்டு தாலாட்டு பாடினார். குழந்தை அழாமல் இருக்க அதற்கு, வாக்களிக்க வந்த மக்களை காண்பித்து வேடிக்கை காட்டினார். குழந்தையின் தாய் வாக்களித்துவிட்டு வரும் வரை மட்டுமின்றி, அவர் வந்த பின்னரும்கூட அந்தக்குழந்தையை பிரிய மனமில்லாமல் சிறிது நேரம் தூக்கி வைத்துக் கொஞ்சினார் ஜெயலட்சுமி. இந்தக் காட்சியைப் பார்த்த வாக்களிக்க வந்த பெண்கள் ஜெயலட்சுமியின் தாய்மை உணர்வைப் பாராட்டினர்.