Skip to main content

அதிமுக ஆட்சியில் விழுப்புரம் நகராட்சியில் முறைகேடு ... உயர் அதிகாரி விசாரணை!!

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
AIADMK rule abuse in Villupuram municipality ... High official investigation

 

விழுப்புரம் நகராட்சி ஒரு மாநகராட்சி அளவிற்கு அந்தஸ்தை உயர்த்தக்கூடிய அளவுக்குப் பெரிய நகராட்சி; 36 வார்டுகளைக் கொண்டது. இப்படிப்பட்ட நகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அகமது என்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகளுக்கு விடப்பட்ட சாலை மற்றும் கட்டடக் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன. அதில் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டதில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி அதில் பலகோடி முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அவரது புகாரில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நகராட்சிப் பணிகளுக்கு அரசு விதிமுறைகளை மீறி டென்டர் நடத்தப்பட்டது. ஓபன் டெண்டர் நடத்தாமல் ரகசியமான முறையில் டெண்டரை முடித்து முறைகேட்டில் ஈடுபட்டுவந்துள்ளனர். நகராட்சியில் பல இடங்களில் பாதாள சாக்கடையில் வீட்டு இணைப்புகள் கொடுக்காமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் பாதாள சாக்கடையில் வீட்டு இணைப்புக்காக மீண்டும் பள்ளம் தோண்டியதால் அதில் 50 கோடிக்கு மேல் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே என்று அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் 10 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பணிகளை அரசு வழிகாட்டு நெறியைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு அப்போதைய நகராட்சி ஆணையர் வழங்கியதாகவும் இதன் மூலம் அரசு விதிமுறைகளை மீறி ஒப்பந்தப் பணிகள் நடைபெற்றுள்ளன என அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேபோல் நகராட்சி தனியார் நிறுவனம் மூலம் குப்பை அகற்றும் பணி நடைபெற்றுவருகின்றன. இதனால் நகராட்சி குப்பை அகற்றும் பணி முழுமையாக நடைபெறவில்லை எனவே நகராட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த ஆண்டு சட்டசபை பொது கணக்கு குழு ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றபோது. அப்போதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் இந்தப் புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டுவருவதாக கடிதம் மூலம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இவை அனைத்தையும் அகமது தமது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார்கள் குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை நடத்துமாறு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை அதிகாரியாக நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குனர் விஜயகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (22.06.2021)  விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து தற்போதைய ஆணையர் தக்ஷ்ணாமூர்த்தியிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளார்.

 

அதேபோல் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் தொடர்பாக நகராட்சி பொறியாளர் மற்றும் கணக்குப் பிரிவு அலுவலர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் நகராட்சி நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக ஏற்கனவே புகார் அளித்துள்ள நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அகமதுவிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை அதிகாரி விஜயகுமார் தற்போது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை முழுமையாக தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன் பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் வரைமுறையின்றி விதிமுறை இன்றி பல்வேறு முறைகேடுகள் பல துறைகளில் நடைபெற்றுள்ளன. அதில் விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்திலும் முறைகேடுகள் நடந்திருப்பதற்கு சாத்தியம் உண்டு என்கிறார்கள் விழுப்புரம் நகராட்சியில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்