திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே ஜி. தும்மலப்பட்டி கிராமத்தில் உள்ளது ஸ்ரீரங்கன் நகர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், அரசு பொது இடத்தை தனியார் ஒருவருக்கு பட்டா போட்டு தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அப்பகுதி மக்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர், அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் அதே கிராமத்தில் கூட்டுறவு அங்காடி திறப்பதற்காக நிலக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனை அறிந்த ஸ்ரீரங்கன் நகர் பொதுமக்கள், அதிமுக எம்.எல்.ஏ. தேன்மொழி சேகரிடம் தங்கள் பிரச்சனையை எடுத்துக் சொல்வதற்காக காத்திருந்தனர். திறப்பு விழா நடக்கும் நேரத்தில் எம்எல்ஏ விடம் பொதுமக்கள் பிரச்சனை செய்து விட்டால் என்ன ஆவது என யோசித்த அதிமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏவை சந்திக்க காத்திருந்த பொது மக்களிடம் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர்.
அதையும் மீறி காத்து இருந்த பொதுமக்களிடம் எம்.எல்.ஏ வரும் பொழுது எதுவும் பேசக்கூடாது என எச்சரித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே திறப்பு விழா நடக்க இருக்கும் இடத்துக்கு வந்த எம்எல்ஏ தேன்மொழி காத்திருந்த பொது மக்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்காமல், கட்சி கொடியை ஏற்றி விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இதனால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.