இன்று நடந்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் இருமொழிக் கொள்கை தான் சிறந்தது என்று ஆளும் அ.தி.மு.க கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இந்தி நுழைந்துவிட்டது.
புதுக்கோட்டை மாவட்ட விவாயிகள் குறை தீர்வுக் கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் உமாமகேஸ்வரி, 13 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 240 விவசாயிகளும் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கும்போது மாவட்ட ஆட்சியருக்குப் பின்னால் இருந்த மாவட்டத்தின் அடையாளமான ஆட்சியர் அலுவலகம் (கோட்டை) படத்துடன் புதுக்கோட்டை என்று தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் மாவட்டத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதைப் பார்த்த விவசாயிகள் மெல்ல மெல்ல புதுக்'கோட்டை'க்குள்ளும் இந்தி நுழையத் தொடங்கிவிட்டது, இருமொழிக் கொள்கை என்பது எல்லாம் கண்துடைப்பா என்று முனுமுனுத்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, இது வழக்கமாக விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடக்கும் கூட்ட அரங்கு இல்லை. காணொளி மூலம் கூட்டம் நடப்பதால் மத்திய அரசுப் பணிகள், ஆய்வுகள், காணொளிக் கூட்டங்கள் நடக்கும் அறையில்தான் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இந்தப் பதாகை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நிரந்தரமாக உள்ள பதாகைதான் என்றனர். எப்படியோ தமிழ்நாட்டில், ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தி முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது என்பது சரியாகத்தான் உள்ளது என்றார்கள் விவசாயிகள்.