கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்த பகுதியில் பழக்கடை, பூக்கடை, துணிக்கடை என ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இங்குள்ள சாலையோர பகுதிகளில் தள்ளுவண்டிகளில் சிற்றுண்டிகள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது என ஏழை எளிய மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு சில கடைகளை நடத்தி வருகின்றனர்.
இதனால், இந்த கடை வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதும் வழக்கம். அந்த வகையில், விருத்தாசலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அதிமுக கட்சியைச் சார்ந்தவர். மேலும், அவர் விருத்தாசலம் நகர மன்ற ஐந்தாவது வார்டு உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கவுன்சிலராகவும் கட்சி பொறுப்பிலும் இருக்கும் ராஜேந்திரன், அங்குள்ள சாலையோர கடைகளில் தொடர்ந்து மாமூல் கேட்டு வசூல் செய்துள்ளார்.
அப்போது, அவர் கேட்ட பணத்தைக் கொடுக்காத ஏழை மக்களிடம், "நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால், இனிமேல் நீங்கள் இந்த இடத்தில் தொழில் செய்ய முடியாது" என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், ராஜேந்திரனால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர் கேட்கும் பணத்தைக் கொடுத்து வந்தனர். அப்போது, இதனைப் பயன்படுத்திக்கொண்ட ராஜேந்திரன் சாலையோர கடைகளில் தொடர்ந்து மாமூல் வசூலித்து வந்துள்ளார். மேலும், அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வந்தது.
இந்நிலையில், வழக்கம்போல் விருத்தாசலம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குச் சென்ற ராஜேந்திரன், அங்குள்ள தள்ளுவண்டியில் தொழில் நடத்தும் பிரியாணி கடையில் மாமூல் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த கடை உரிமையாளர், பணமெல்லாம் கொடுக்க முடியாது" எனக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த ராஜேந்திரன் "சீக்கிரமா கடைய எடு.. பொருள் எல்லாம் எடுத்து உள்ள வை.. இனிமே இங்க தொழில் செய்யக் கூடாது” என மிரட்டியுள்ளார்.
ஆனால், அதற்கெல்லாம் பணியாத கடை உரிமையாளர், "எதுக்குணா கடை போட கூடாது. நீங்க காசு கேட்டு கொடுக்கலைன்னா கடை போடக் கூடாதா? நீங்க யாரு முதல்ல? நான் எதுக்கு உங்களுக்கு காசு கொடுக்கணும்" என எடுத்தவுடனே ஹை வால்டில் எகிறினார். இதனால் பம்மிய ராஜேந்திரன், “தம்பி பப்ளிக் பா" என நாசூக்காக கூறினார். ஆனால், அப்போதும் விடாத கடை உரிமையாளர், "என்ன சும்மா நூறு ரூபாய் கொடு நூறு ரூபாய் கொடுன்னு கேக்குறீங்க? இனிமே இந்த வேல வெச்சிக்காதிங்க" எனக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், இந்த சம்பவத்தை அங்கிருந்த ஏராளமான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், அதிமுக கவுன்சிலர் மிரட்டுவதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதன்பிறகு, அந்த விடியோவை சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ பொதுமக்களிடையே அதிகம் பகிரப்படுகிறது.
- சிவாஜி