தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அதே வேளையில் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.
அதே போல் வேட்பு மனுத்தாக்கல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் சார்பில் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆம்பூர் நகராட்சி கவுன்சிலர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தி.மு.க.வில் இணைந்துள்ளார். ஆம்பூர் 14-வது வார்டு வேட்பாளராக தமிழருவி என்பவரை நேற்று அ.தி.மு.க. அறிவித்தது.
நேற்று இரவு 11 மணியளவில் அ.தி.மு.க. வேட்பாளர் தமிழருவி தன்னை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. 14-வது வார்டு வேட்பாளரும், நகர செயலாளருமான ஆறுமுகம் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் தி.மு.க.வில் இணைந்தது ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் தி.மு.க.வில் இணைந்தார் என்பது குறித்து அ.தி.மு.க.வினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.