திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக மணல் மாஃபியா குளந்திரான்பட்டு கரிகாலன் தம்பி பாசறை கருப்பையாவுக்கு தான் சீட்டு வேண்டும் என்று மாஜி விஜயபாஸ்கர் ஒற்றைக்காலில் நின்று சீட்டும் வாங்கிக் கொடுத்துவிட்டார். சீட்டுவாங்கியதும் தி.மு.க கரிகாலன் ஜாதிய இயக்கங்கள், தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகளை ரகசியமாக சந்தித்து பேசி வருகிறார். பணம் எவ்வளவு செலவானாலும் சரி தம்பி ஜெயிக்கனும் என்று உடன்பிறப்புகளையும் வளைத்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஞயிற்றுக் கிழமை மாலை புதுக்கோட்டை நகரில் அ.தி.மு.க வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சிக்கு நகரில் உள்ள ஒவ்வொரு வார்டில் இருந்தும் ர.ர.க்கள் மட்டுமின்றி அந்தந்த பகுதி பொதுமக்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அதே போல லாரி மார்க்கெட் அருகில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்பு பகுதி அ.தி.மு.க கவுன்சிலர் பாரதி சின்னையா, இன்று ஓட்டுக்கேட்டு வரும் அ.தி.மு.க வேட்பாளருடன் வர நீங்க எல்லாரும் வரணும் என்று தூய்மைப் பணியாளர்களை அழைத்திருந்தார்.
ஆனால் இரவு அதிக நேரமானால் அதிகாலை எழுந்து நகரை தூய்மைப்படுத்த போகவேண்டும் என்று காத்திருந்தவர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். அதனால் நாங்க அழைச்சும் வரலயில்ல அதனால உங்களுக்கு குடிதண்ணீர் இல்லை என்று 2 நாட்களாக குடிதண்ணீர் லாரியை நிறுத்தி விட்டனர்.
நகராட்சி சேர்மன் தி.மு.க, இப்போது நகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டில் உள்ளது. அதையெல்லாம் மீறி ஒரு அ.தி.மு.க கவுன்சிலர் குடிதண்ணீரை நிறுத்தி இருப்பது வேதனையிலும் வேதனை, தி.மு.க சேர்மனும், நகராட்சியும் அ.தி.மு.க வுக்கு துணை போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் எங்களுக்கு தண்ணியை நிறுத்தினது போல ஒரு நாள் நாங்க நகரை கூட்டவில்லை என்றால் என்ன நிலை ஆகும் யோசித்துப் பாருங்கள் என்கிறார்கள் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள். தேர்தலுக்கு முன்பே இப்படின்னா தேர்தல்ல ஜெயிச்சுட்டா என்னவெல்லாம் செய்வாங்க.. என்ற பேச்சுகளும் அடிபடுகிறது.