சிதம்பரத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் விதொச மாநில செயலாளரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான சின்னதுரை, மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செல்லையா, மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், ஜோதி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 100 நாள் வேலைத்திட்டத்தில் கிராமப்புறங்களில் 20 நபர்களுக்கு மட்டுமே காலையில் 8.30 மணிக்கு விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்கு வந்து பயோ மெட்ரிக் முறையில் 4-30 மணிவரை வேலை செய்ய வேண்டும் எனக் கட்டாய நிர்ப்பந்தத்தை உடனடியாக மத்திய மாநில அரசுகள் மாற்ற வேண்டும்.
இந்நிலையில் 31-ந்தேதி விவசாயிகள் துரோக நாளாகக் கடைபிடித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் விதொச பெரும் திரளாகக் கலந்து கொள்ள உள்ளது. அதில் நிலம், மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 6-ஆம் தேதி வட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட புதிய தலைவராக ரமேஷ்பாபு, பொருளாளராகக் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர்களாக ஜெயக்குமார், பன்னீர், வெற்றி வீரன் துணை செயலாளர்களாக நெடுஞ்சேரலாதன், ஜோதி மணி உள்ளிட்ட 27 பேர் கொண்ட மாவட்ட குழுத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாகச் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ. சின்னதுரை பேசுகையில், ஒன்றிய அரசு 100- நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியைக் கட்டுமான பணிக்குப் பெருவாரியாக ஒதுக்கப்படுவது என்பது அதிகரித்து வருகிறது. இது விவசாயத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், ஊராட்சியில் உள்ள நீர்நிலைகள், பொதுச்சொத்துக்களை பாதுகாக்கவும் ஒதுக்கப்படுவது. எனவே இதனை மாற்று பணிக்குப் பயன்படுத்தக் கூடாது. கடலூர் மாவட்டத்தில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கடந்த 3 மாதமாகக் கூலி வழங்காமல் உள்ளனர்.
கூலி வழங்குவதில் சாதிவாரியாகக் கூலியை விடுவிப்பது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் உள்ளது. இதனை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்கிறோம் என்று கூறிய பிறகும் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு என்பதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதனை விவசாய தொழிலாளர் சங்க தமிழ் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நடைமுறையைத் தமிழகத்தில் அகற்றிக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை கிராமப்புறத்தில் உள்ள மக்கள் வீடு கட்ட முடியாமல் அவதி அடைந்து வருகிறார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர் சங்கத்தின் போராட்டத்தின் விளைவாக நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கத் தமிழக முதல்வர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நகர்புற வேலைவாய்ப்பை அறிவித்தார். அதில் முறையான கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
ஏழை, எளிய மக்களும் விளிம்புநிலை மக்களும் பாதிப்படையாத வகையில் உரிய கணக்கெடுப்பு நடத்தி நகர்ப்புற வேலைகளை ஏழைமக்களுக்கு வழங்க வேண்டும். மழைக்காலங்களில் விவசாயிகளுக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த நிவாரணம் கிடைப்பதில்லை. அவர்கள் பேரிடர் காலங்களிலும் மழைக் காலங்களிலும் எந்த வேலையும் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து முடங்கியுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.