சில மாதங்களுக்கு முன்பு குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் தன் தாயை தொலைத்த நிலையில் வனத்துறையினர் குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தது. இந்நிலையில் அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் மூன்று நாட்களாக ஈடுபட்டு வந்த நிலையில் ஒருவழியாக தாய் யானையிடம் குட்டியானை சேர்க்கப்பட்டது.
முதுமலையில் நீரோடையில் அடித்து வரப்பட்டது பிறந்த 4 மாதமே ஆன குட்டியானை. அதனை மீட்ட வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்ப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். கடந்த திங்கட்கிழமை வனப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண் யானையை குட்டியானையின் தாயாக இருக்கலாம் என நினைத்து குட்டி யானையை அதனிடம் விட்டு சென்றனர். அடுத்த நாள் காலை சென்று பார்க்கையில் அதே பகுதியில் குட்டி யானை தனியாக சுற்றிக் கொண்டிருந்தது.
பசியால் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட அந்த யானை குட்டியை மீண்டும் வனத்துறையினர் மீட்டனர். குட்டி யானையை பராமரிக்க உடனடியாக இரண்டு கால்நடை மருத்துவர்கள் மற்றும் குட்டியானைகளை பராமரிப்பதில் அனுபவம் வாய்ந்த யானை பாகன் பொம்மன் யானை குட்டியைப் பராமரிக்கும் பணியை எடுத்துக் கொண்டனர். மொத்தமாக எட்டு குழுக்களாக பிரிந்து வனத்திற்குள் யானை குட்டியை தாயுடன் சேர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆகஸ்ட் 31ஆம் தேதி சிகூர் வனப்பகுதி அருகே உள்ள யானைக் கூட்டம் ஒன்று இருப்பதாக அறிந்த வனத்துறையினர் வனத்துறை வாகனத்தில் குட்டி யானையை ஏற்றிக்கொண்டு அங்கு விரைந்தனர். அங்கு ஒரு ஆண் யானையும் பெண் யானையும் நின்று கொண்டிருந்தது. யானை குட்டியை வனத்துறையினர் அங்கே இறக்கி விட்டனர். வனத்துறையினரைக் கண்ட ஆண் யானை சில மீட்டர் தூரம் துரத்திய நிலையில் குட்டியானை மீட்டுக் கொண்டது. அதன் பின் அந்த ஆண் யானை, குட்டி யானையை அழைத்துச் சென்று தாயுடன் சேர்த்துக் கொண்டது.
இப்படி மூன்று நாள் போராட்டத்திற்குப் பிறகு அம்மாவிடம் சென்று சேர்ந்தது யானை குட்டி.