Published on 06/09/2019 | Edited on 06/09/2019
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். அதன் பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட பொள்ளாச்சி விவகாரத்துக்கு பிறகு, அந்தப் பகுதியில் திரைமறைவுக் காரியங்களுக்கு உதவியாக அனுமதி இல்லாமல் இருக்கும் ரெசார்ட்டுகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், ஒரே ஒரு ரிசார்ட்டை மட்டும் மூடி சீல் வைத்த மாவட்ட நிர்வாகம், மற்ற ரிசார்ட்டுகளை கண்டுகொள்ளவில்லை என்று கூறுகின்றனர். இது தொடர்பாக நிறைய புகார்கள் சென்றதால் நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான மாவட்ட நிர்வாகம், இது தொடர்பாக மேலிட அரசு அதிகாரிகளிடம் பேசியதாக தெரிவிக்கின்றனர். முதல்வரின் சமூகத்தைச் சேர்ந்த பலரும் அந்தப் பகுதியில் ரிசார்ட் நடத்தி வருவதால், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு வெளியூர்க்காரர்களால் நடத்தப்படும் 12 ரெசார்ட்டுகளை மட்டும் கணக்கிட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக கூறுகின்றனர்.