விநாயகர் சிலைகள் வைக்கும்போது பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்கள், சாலைகளை ஆக்கிரமித்து சிலைகள் வைக்க கூடாது; அப்படி அமைக்கப்படும் சிலைகளுக்கான மின் இணைப்பை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி இல்லாமல் கொடுக்கக்கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் பொது நல வழக்கு தொடர்ந்தார். பிலாஸ்டர் ஆஃப் பாரிஸ் உள்ளிட்ட ரசாயண பொருட்கள் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரனைக்கு வந்தபோது, கட்சி கொள்கைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளால் மட்டும் தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்களா? பல்வேறு அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது கூட விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா? மின்சாரம் திருட்டு தனமாக எடுப்பதில்லையா? அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி பொதுக்கூட்டங்களால் நடத்தப்படுவதால் சாலை போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தவில்லையா? என மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அரசு விதிகளை வகுத்து அரசாணை பிறப்பித்துள்ளது அது எப்படி சட்டவிரோதமாகும் என கேள்வி எழுப்பியதுடன், பொதுநல வழக்காக கருத முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
சிலை வைப்பது தொடர்பான விதிகளை முறையாக கடைபிடிக்கவும், விநாயகர் சிலைகள் வைக்கும்போது பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.