கரூரில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கரூரில் பல இடங்களில் கலப்பட டீசல் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அவர்கள் கரூர் சுக்காலியூர் அருகில் உள்ள கருப்பம் பாளையம் என்ற இடத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த டேங்கர் லாரியை சோதனை செய்தனர். அதில் சுமார் 1000 லிட்டர் கலப்பட டீசல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கே நின்றிருந்த மணிகண்டன் என்ற நபரை போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்துள்ளார். ஒரு கட்டத்தில் மணிகண்டன் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸார் அந்த டீசல் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.