சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், செம்மலை, கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோல், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தகவல் கூறுகின்றன.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல், கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கவும், அந்த பதவிக்கு கே.பி.முனுசாமி அல்லது திண்டுக்கல் சீனிவாசனை நியமிப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப் படலாம் என்றும் தகவல் கூறுகின்றன.
இதனிடையே, பெரியகுளத்தில் இருந்து மதுரைக்கு சாலை மார்க்கமாக காரில் வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை விரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.