![admk party eps photo pudukkottai district](http://image.nakkheeran.in/cdn/farfuture/pV4SWIh8cagFLvD8DDx3D1lwp0bWVftjy-pzPGzZtm4/1624985487/sites/default/files/inline-images/mla%20%282%29.jpg)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊராட்சி ஒன்றியங்களை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கைப்பற்றினார்கள். அதேபோல மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களும் தி.மு.க. கூட்டணி கட்சியினரே அதிகம் வெற்றி பெற்றனர்.
ஆனால் தேர்தல் பொறுப்பாளராக இருந்த அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தேர்தல் வியூகத்தால் சில காங்கிரஸ், தி.மு.க. உறுப்பினர்களை சரி செய்து மாவட்ட சேர்மனான அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்தார்.
அதேபோல தனது தொகுதிக்குள் வரும் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 20 வார்டுகளில் 10 தி.மு.க.வும், 1 காங்கிரஸ் என 11 பேர் தி.மு.க. கூட்டணியிலும் 9 பேர் அ.தி.மு.க. கூட்டணியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் சிலரை சரி செய்து அ.தி.மு.க. மாஜி மாவட்டச் செயலாளர் ராமசாமியை சேர்மன் நாற்காலியில் அமர வைத்தார்.
இந்த நிலையில் தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், இன்று செவ்வாய்கிழமை ஒன்றியக்குழு கூட்டம் தொடங்கும் முன்பே அ.தி.மு.க. சேர்மன், அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்து, "தி.மு.க.வின் கூட்ட அரங்கில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெ படம் இருக்கட்டும் எடப்பாடி படத்தை அகற்றுங்கள்" என்று கூச்சல் போட்டதால் அ.தி.மு.க. சேர்மன் முன்பே எடப்பாடி பழனிசாமி படத்தை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அகற்றினார்கள். அதன் பிறகே கூட்டம் நடந்தது.
தொடர்ந்து சில தி.மு.க. உறுப்பினர்கள் கூறும் போது.. "அடுத்த கூட்டத்தில் சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். அப்போது தி.மு.க. உறுப்பினர் சேர்மன் நாற்காலியில் அமர வைப்போம். இனிமேல் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பவர் எடுபடாது" என்றனர்.