சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று (11/07/2022) காலை 09.00 மணிக்கு அ.தி.மு.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்துள்ளனர். அதேபோல், அ.தி.மு.க. தொண்டர்கள் அதிகளவில் திருமண மண்டபம் முன்பு குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமை அலுவலக கதவை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தனர். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார். பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கட்சியின் அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம் கைப்பற்றியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே இருந்த எடப்பாடி பழனிசாமி பேனர்கள் கிழித்தெறிந்தனர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேலும், காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தடையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உடைத்தெறிந்தனர்.