அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சியின் நிர்வாகிகளுடன் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் மூத்த நிர்வாகிகளுடன், ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்டச் செயலாளர்களும் கலந்துக் கொண்டிருப்பதாகத் தகவல் கூறுகின்றன.
அதேபோல், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி, தளவாய் சுந்தரம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கட்சியின் இரு தலைவர்களும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து தீர்மானக்குழுவில் உள்ள நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, வைகை செல்வன், பா.வளர்மதி, பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும், எதிராகவும் தொண்டர்கள் முழக்கமிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த தாக்குதலில் கட்சி நிர்வாகி ஒருவர் காயமடைந்தார்.
ரத்த காயத்துடன் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளரும், பெரம்பூர் பகுதிச் செயலாளருமான மாரிமுத்து, எடப்பாடி ஆளா? என்று கேட்டுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.