ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தபோது,
விருதுநகர் மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே கரோனா வைரஸ் சிகிச்சையில் உள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடியார் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விருதுநகர் மாவட்ட அதிமுக மூலம் தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் தங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.
நாட்டில் அரசியல் பேசக்கூடிய தருணம் இது கிடையாது. வீட்டில் இரு; விலகி இரு; தனித்திரு என்றுதான் பாரத பிரதமர், தமிழக முதல்வர் உட்பட உலக தலைவர்கள் கூறிவருகின்றனர். உலக தலைவர்கள் அனைவரும் விலகி இரு என்று கூறிவரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் ‘ஒன்றிணைவோம் வா’ என்று கூறி அனைவரையும் அழைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகிறார். ஸ்டாலினை பொருத்தவரையில், கரோனா வைரஸை வைத்து அரசியல்தான் செய்கிறாரே தவிர, மக்களை காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவரை செல்போனில் இரண்டு நாளில் 2 லட்சம் பேர் தொடர்பு கொண்டனர் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களை ஏமாற்றும் செயலில் ஸ்டாலின் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதிமுகவினர் உதவி செய்து வருவதுபோல், திமுகவினரும் உதவி செய்ய வேண்டுமென்று ஸ்டாலின் கூற வேண்டுமே தவிர, அரசை குறைகூறிக் கொண்டே இருக்கக்கூடாது, அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஸ்டாலின் குறை கூறிக்கொண்டே இருக்கக் கூடாது. பிரச்சனைகள் வரும்போது பொதுமக்கள் தேடி வருவது ஆலயங்களையும், கோவில்களையும்தான். இறைவனுக்கு செய்யும் தொண்டு ஏழைகளுக்கு செய்யும் தொண்டுதான். எனவே இந்த நேரத்தில், ஜோதிகா கூறிய கருத்துகளெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கு, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வராது.” என்றார்.