“எல்லாம் எம்.ஜி.ஆர். தந்த வாழ்வுடா..” என்று புளகாங்கிதம் கொள்கின்றனர் அதிமுக சீனியர்கள். வேறொன்றுமில்லை.. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளைப் பெறுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார் அல்லவா? அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.சி.சம்பந்த் போன்றோரும் கலந்துகொள்கிறார்கள் அல்லவா? அந்தப் புகைப்படங்களையெல்லாம் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள் அல்லவா? அதனைக் கண்டுதான் ஆளும்கட்சியினருக்கு அப்படி ஒரு பெருமிதம்!
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நியூயார்க் விமான நிலையம் வந்தடைந்த எடப்பாடிக்கு அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் சைடெக் நிறுவனத்தின் செயல்பாடுகளை அறிந்து அங்குள்ள கால்நடைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் பராமரிப்பு குறித்த ஆய்வினை மேற்கொள்ளவிருப்பதாகச் சொல்லும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நியூயார்க்கில் வலம் வரும் படங்களை, KTR ARMY என்ற பெயரில் இயங்கிவரும் முகநூல் பக்கங்களில் தாராளமாகக் காணமுடிகிறது.
வெளிநாடுகளில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நேரத்தில், மதுரை போன்ற பெருநகரங்களில் அமைச்சர் செல்லூர் ராஜு போன்ற அதிமுக நிர்வாகிகள் தாய் மீதான தவிப்பில் இருப்பதாகச் சுவரொட்டிகள் சோகத்தை வெளிப்படுகின்றன. அதில், ‘இறைவா இரங்கிடு விரைவா! போதும்.. தொடர் தாய் பறிப்பு!’ என்ற வாசகங்களோடு, 2016-ல் ஜெயலலிதா, 2017-ல் மதுரை கிரம்மர் சுரேஷின் தாயார் எலிசபெத் ஜெயசீலி, 2018-ல் செல்லூர் ராஜுவின் தாயார் ஒச்சம்மாள் என இறப்பை வரிசைப்படுத்தியிருக்கின்றனர்.
தாலி பறிப்பு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். மதுரை அதிமுகவினரோ தாய்மார்களின் இறப்பை ‘தாய் பறிப்பு’ என்று புதுவிதமாகச் சொல்லியிருக்கின்றனர். ‘போதும். இரங்கிடு!’ என விரைந்து இளகச்சொல்லி இறைவனுக்கே உத்தரவு பிறப்பித் திருக்கின்றனர்.
‘அம்மா என்றால் அன்பு’ என்று சொந்தக்குரலில் பாடியவர் ஜெயலலிதா. ஆனால், அவர் உயிரோடு இருந்தவரையிலும், அதிமுகவினருக்கு அம்மா என்றால் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே! சொந்த அம்மா மீதான அன்பையெல்லாம் வீட்டைத் தாண்டி வெளியில் காட்ட மாட்டார்கள். தற்போது நல்லதொரு மாற்றத்தை அக்கட்சியினரிடம் காணமுடிகிறது. ஆம். ஜெயலலிதாவுக்கு இணையாக, தங்களின் சொந்த அம்மாக்களின் படங்களையும் போட்டு போஸ்டர் ஒட்டுகின்றனர். வாழ்க தாய்ப்பாசம்!