அதிமுகவின் கட்டமைப்பில் பல மாற்றங்களை புகுத்த வேண்டும் என திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கான முதல் கட்ட நடவடிக்கையை அவரது சேலம் மாவட்டத்திலிருந்து துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் உயிரோடு இருந்தபோது, திமுகவின் மாவட்ட எல்லைகள் குறித்து கட்சி சீனியர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து கொண்டிருந்தார். மகளிர் அணி செயலாளர் என்கிற வகையில் கனிமொழியிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன.
அப்போது, ’’அரசியல் ரீதியாக பார்த்தால் சாதிய உணர்வுகள் மக்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவைகளாகவே இருக்கின்றன. பெரும்பான்மை சமூகத்திற்கான முக்கியத்துவம் திமுகவில் மறுக்கப்படுவதாக குற்றசாட்டுகள் இருக்கிறது. அதனால், அமைப்பு ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்தையும் இரண்டாகப் பிரித்து, ஒரு மாவட்டத்திற்கு பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை மாவட்ட செயலாளராகவும், மற்றொரு மாவட்டத்துக்கு சிறுபான்மையின சமூகத்திலிருக்கும் ஒருவரை மாவட்ட செயலாளராகவும் நியமிக்கலாம். மாவட்டங்களில் மட்டுமல்லாமல் நகர, ஒன்றிய, கிளைக்கழக அமைப்புகள் வரை இதனை அமல்படுத்தினால், பெரும்பான்மை சமூகத்தை திமுக புறக்கணிக்கிறது என்கிற குற்றச்சாட்டை தவிர்க்கலாம்’’ என்று கலைஞரிடம் தனது கருத்தாக சொன்னார். நல்ல யோசனையாக இருக்கிறது என சொன்ன கலைஞர், இந்த கருத்துகளை மகளிர் அணி சார்பில் ஒரு அறிக்கையாக தரச்சொல்லி கனிமொழியிடம் தெரிவிக்க, அதன்படி ஒரு அறிக்கையை தயாரித்துக் கொடுத்தார் கனிமொழி.
இதனை நடைமுறைப்படுத்த கலைஞர் முயற்சித்தார். முழுமையாக அதனை நிறைவேற்றுவதற்குள் கலைஞரின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த யோசனை அப்படியே கிடப்பில் விழுந்தது. கலைஞரிடம் கனிமொழி யோசனை தெரிவித்த அந்த பாணியைத்தான் தற்போது கையிலெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி!
“முதல்வர் ஈ.பி.எஸ்.ஸும் துணைமுதல்வர் ஓபிஎஸ்ஸும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்திய கட்சி சம்பந்தப்பட்ட ஆலோசனையில், இந்த யோசனையை ஈ.பி.எஸ். முன்வைத்திருக்கிறார். ஆரோக்கியமான யோசனைதான் என ஓபிஎஸ்ஸும் ஓ.கே. சொல்லியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஒன்றிய கழகங்களை உடைத்து ஒரு பகுதியில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கும், மற்றொரு பகுதியில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவருக்கும் வாய்ப்பளிக்க முடிவு செய்து, அதனை முதல் கட்டமாக தனது சேலம் மாவட்டத்திலிருந்து தொடங்க தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி” என்கிறார்கள் அதிமுகவினர். அதிமுக ஒன்றிய கழகங்களில் அமல்படுத்தப்படும் இந்த நடைமுறை, மாவட்ட கழகங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அதிமுகவில் குரல் எதிரொலிக்கிறது.