தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்புப் பணிகள், கரோனா தடுப்பூசிப்போடும் பணிகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் கூடிய முழு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன், கரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்டவையின் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர். இன்றைய கரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையைக் கருத்திற்கொண்டு மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு, உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.