அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 58.44 கோடி சொத்து சேர்த்ததாக வந்த புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்களான இனியன், இன்பன் உள்பட ஆறு பேர் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, இன்று (08/07/2022) அதிகாலை காமராஜூக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. அதேபோல், காமராஜின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்களின் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் உள்ள காமராஜின் இல்லத்தில் அதிகாலை 05.00 மணி முதலே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி வீடுகளிலும் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.