சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட தர்மபுரியில் உள்ள முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான விரிவாக்க மையத்தில் நடப்புக் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக பெரியார் பல்கலை. முதுநிலை விரிவாக்க மைய இயக்குநர் (பொறுப்பு) மோகனசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக விரிவாக்க மையத்தில் 8 முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ., ஆங்கிலம், எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், உயிரிதொழில்நுட்பவியல் (பயோடெக்னாலஜி) மற்றும் எம்.எஸ்.சி., புவியமைப்பியல் ஆகியவற்றுக்கு நடப்புக் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பு விவரங்களை www.periyaruniversity.ac.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் 300 ரூபாய். இக்கட்டணத்தை இணையம் வழியாக செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், தங்களுடைய 5 பருவ மதிப்பெண் சான்றிதழ்கள், ஏனைய பிற தேவையான சான்றிதழ்கள் ஆகியவற்றை ஸ்கேன் செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பெரியார் பல்கலை முதுநிலை பாடப்பிரிவுகளின் தரத்தை, தேசிய அளவிலான நெட், செட், கேட், சி.எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளன.
இணைய வழியில் விண்ணப்பிக்க ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இது தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற 04342 266399 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.’ இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.