திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர், அக்கரைப்பட்டி, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, சித்தையன்கோட்டை மற்றும் ஆத்தூர் காமராசர் நீர்த்தேக்க பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மக்காச்சோள பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் தோட்டத்தின் உள்ளே புகுந்து பயிர்களை அழிப்பதோடு காவல்காத்து வரும் காவலாளிகளையும் விரட்டி வருகிறது. இதுதவிர பன்றிகள் கூட்டமாக வரும்போது அவ்வழியே செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக மல்லையாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பன்றிகளால் பலமுறை விபத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆத்தூர் ஊராட்சி செயலாளர் மணவாளன் மல்லையாபுரத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பன்றிகள் கூட்டம் திடீரென வந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால் பலத்த காயத்திற்கு ஆளானார். இதுபோல தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் காட்டுப்பன்றி மற்றும் ஆடுகள், மாடுகளிலிருந்து மக்காச்சோள பயிர்களை காப்பாற்ற சேலைகளை கொண்டு வண்ணவேலிகள் அமைத்து வருகின்றனர்.
இந்த வேலிகள் பார்ப்பதற்கு பல வண்ணங்களில் இருப்பதால் காட்டு விலங்குகள் இதை பார்த்தவுடன் மிரண்டு தோட்டத்திற்குள் நுழையாமல் சென்றுவிடுகின்றன. தற்போது விவசாயிகள் தோட்டங்கள் முழுவதும் வேலிகள் அமைக்க நூற்றுக்கணக்கான சேலைகளை வாங்கி குவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆத்தூரை சேர்ந்த முருகன் கூறுகையில், மக்காச்சோள பயிரில் கதிர் விட்டவுடன் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளிடமிருந்து காப்பாற்ற நாங்கள் புதிய மற்றும் பழைய சேலைகளை கொண்டு தோட்டம் முழுவதும் வேலிகள் அமைத்து வருகிறோம் என்றார்!