கோவையில் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதாகக் கூறி பா.ஜ.க. நிர்வாகிகள் ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் பெரியார் மற்றும் தி.மு.க.வின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா குறித்து இழிவாகப் பேசியதாகக் கூறி பா.ஜ.க. நிர்வாகி பாலாஜி உத்தமராமசாமி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அக்கட்சியைச் சேர்ந்த 11 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, பாலாஜி உத்தமராமசாமி ஜாமீனில் வெளியே வந்த நிலையில், பின்னர் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த 11 பேருக்கும் மேளம், தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், அதனை மீறி மேள, தாளங்கள் முழங்க அவர்கள் ஊர்வலம் சென்ற போது, காவல்துறையினருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், காவல்துறையின் எச்சரிக்கையை மீறி செயல்பட்டதாகக் கூறி, பா.ஜ.க. நிர்வாகி பாலாஜி உத்தமராமசாமி, உட்பட ஏழு பேர் மீது இரு பிரிவுகளின் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.