
தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அறிக்கையில் மாநிலம் முழுவதும் உள்ள 39 ஆயிரத்து 508 கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை அடையாளம் காண்பதற்கும் அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 9014 கோயில்களுக்கு சொந்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இணை ஆணையர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 807 கோவில்கள் சொந்தமான நிலங்களில் உள்ள 28 ஆயிரத்து 617 வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 1900 வாடகைதாரர்களிடம் இருந்து 14 கோடியே 80 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 22 ஆயிரத்து 600 கட்டிடங்களும் 33 ஆயிரத்து 565 காலியிடங்களும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், சிலவற்கை வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 6,202 கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்ததில் அதில் 14 ஆயிரத்து 21 பேர் ஆக்கிரமித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறநிலையத் துறையின் அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கோவில் நிலங்களை மீட்பதற்கு கூடுதலாக 6 வாரம் அவகாசம் வழங்கி இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.