சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் குறும்படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வேளச்சேரி செல்லும் மார்க்கத்தில் மூன்று இளைஞர்கள் நடந்து சென்றனர். பின்னர் அங்கு வந்த புறநகர் ரயிலில் இருந்து இறங்கிய ஒருவரை விரட்டி செல்போனை பறித்து சென்றனர். பின்னர் அங்கு படுத்திருந்த ஒருவரையும் மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதனை படம் பிடித்த கல்லூரி மாணவர்களையும் அந்த கும்பல் மிரட்டி உள்ளது.
இது குறித்து அந்த மாணவர்கள் அருகில் இருந்த ரோந்து பணி போலீசாரிடம் தகவல் கொடுத்ததால் அங்கு வந்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அவர்களில் ஒருவன் ஆப்பிரிக்க நாடான சூடானைச் சேர்ந்த முஸ்தபா என்பது தெரியவந்தது. அவர் இப்படி இந்தியாவிற்கு வந்தார், அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவரை தவிர மற்ற இருவரும் அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் கணேஷ்குமார் என்றும் தெரியவந்தது. இதில் பார்த்திபன் மீது கொலை வழக்கும் கணேஷ்குமார் மீது ஏராளமான வழிப்பறி வழக்குகளும் உள்ளன. சூடானைச் சேர்ந்த கொள்ளையனுக்கும் சென்னை கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் தவிர்க்க கடைசி ரயில் வந்து சென்ற பின்னரும், அதிகாலையிலும் போலீசார் ரோந்து ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.